ECONOMYSELANGOR

கூட்டாக வாங்கப்பட்ட லோட் நிலங்களுக்கு அங்கீகாரம் இல்லை- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், நவ 10- சிலாங்கூரில் கூட்டு நிலப்பட்டாவைக் கொண்ட லோட் நிலங்களை வாங்கும் மற்றும் விற்கும் நடவடிக்கைகளை மாநில அரசு அங்கீகரிக்கவில்லை.

இத்தகைய நிலங்கள் தனி நிலப்பட்டா இன்றி ஒப்பந்த கடிதத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருப்பதால்  அந்நிலங்களின் விற்பனைக் கொள்முதல் நடவடிக்கைகள் நிலத்தை வாங்குவோருக்கு பல்வேறு பிரச்னைகள உண்டாக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகள் பரவலாக நடைபெறுவதை தடுப்பதற்காக விவசாய அந்தஸ்து கொண்ட லோட் நிலங்களின் ஒப்பந்த கடிதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிப்பதென நில,மாவட்ட மற்றும் ஊராட்சி மன்ற நிலையிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில அரசு ஒரு திடமான கொள்கையை வரைந்து அமல்படுத்தும் வரை இத்தகைய விண்ணப்பங்களை நிராகரிக்கும் முடிவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

லோட் நிலங்களை வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இயக்கங்களை மாவட்ட மற்றும் நில அலுவலகமும் நில மற்றும் கனிம வளத்துறையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

பெரும்பாலும் விவசாய அந்தஸ்து கொண்ட இத்தகைய லோட் நிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலப்பட்டாவைக் கொண்டிருக்கும். எனினும், அந்நிலம் சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு பிரத்தியேக ஒப்பந்தம் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படும்.

இந்நிலங்கள் கட்டுபடி விலையில் விற்கப்பட்டாலும் நிலப்பட்டாவில் பெயர் இல்லாதது, விற்பனை கொள்முதல் நடவடிக்கையில் சிக்கல் ஏற்படுவது, நிலத்திற்கான நிபந்தனைகளை மீறுவது, இறப்பு அல்லது மேம்பாட்டுப் பணிக்கான நிலத்தை கையகப்படுத்தும் போது இழப்பீடு பெற இயலாமல் போவது பிரச்னைகளை நிலத்தை வாங்குவோர் எதிர்நோக்க வேண்டியுள்ளது.


Pengarang :