ECONOMYNATIONALPBTSELANGOR

டோப் கிளேவ் ஊழியர் தங்கும் விடுதியில் பொது முடக்கம் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

ஷா ஆலம், நவ 30- கிள்ளானில் உள்ள டோப் கிளேவ் கையுறை தொழிற்சாலை ஊழியர் தங்கும் விடுதியில் அமல் படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனையில் அத்தொழிலாளர்கள் மத்தியில் அந்நோய்த் தொற்று இன்னும் காணப்படுவதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அந்த தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் இருந்த 5,805 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3,406 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு அந்த தொழிலாளர் தங்கும் விடுதியில் இன்றுடன் முடிவுக்கு வரும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் 14 நாட்களுக்கு அதாவது வரும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்க சிறப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.

அங்குள்ள அனைத்து தொழிலாளர்களும் கிள்ளான் மாவட்ட சுகாதார இலாகாவின் கண்காணிப்பின் கீழ் தனியார் கிளினிக்கில் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் சிறப்பு மையங்களிலும் உள்நாட்டு தொழிலாளர்கள் வீடுகளிலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :