NATIONALYB ACTIVITIES

தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் எங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கேள்வி

ஷா ஆலம், நவ 7:- பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் 2021ம் ஆண்டு, தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதி அமைச்சர் துங்கு சப்ரோல் இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்றி விட்டதாகப் பேராக் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடும் அறிவிக்கப்படும்” என்று நிதி அமைச்சரின் முழு பட்ஜெட் உரையையும் மிக ஆவலுடன் செவிமடுத்த இந்தியர்களில் தானும் ஒருவர், பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடு குறித்து அறிவிக்கவேயில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது என்றார் அவர்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஆண்டுதோறும், தலா ரிங்கிட் 50 மில்லியன் என்று தாய்மொழிப் பள்ளிகளுக்குக் குறிப்பாகத் தமிழ், சீனப் பள்ளிகளின் நிர்வாகப் பயன்பாடுகளுக்கு ஒதுக்கி வந்த தொகை குறித்து, இவ்வாண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் குறிப்பிடத் தவறியது இந்நாட்டு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்குப் பெரிய மன உறுத்தலை அளித்திருக்கும் என்பது உறுதி என்றார் மாண்புமிகு வி. சிவகுமார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை அப்படியே ஒதுக்கீடு செய்துள்ள நிதி அமைச்சு, தமிழ் சீன மொழிப் பள்ளிகளுக்கான தொகையை அறிவிக்காதது, தாய்மொழிப் பள்ளிகள் மீதான புதிய பெரிக்காத்தான் நேஷனல்  அரசாங்கத்தின் கொள்கையின் பிரதிபலிப்பா அல்லது தவறாக விடுபட்டுவிட்டதா என்பதே இன்றைய முக்கியக் கேள்வியாகும்.

இது குறித்துத் தொடர்ந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விளக்கம் பெறப்படும் என்ற அவர். இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு தங்களை ஏமாற்றாது என்று இந்திய சமுதாயம் நம்புவதாகக் குறிப்பிட்டார் பேரா சட்டமன்றத்தின் முன்னால் சபா நாயகரும் இப்போதைய பேரா பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவகுமார்.


Pengarang :