ECONOMYMEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டு விநியோகச் சட்ட மசோதா நிர்வாக குழு நிலையில் நிறைவேற்றம் கண்டது

ஷா ஆலம், நவ 30- பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டு விநியோகச் சட்ட மசோதா நிர்வாகக் குழு நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி வாக்களிப்பின் வாயிலாக இந்த மசோதா நிறைவேற்றம் கண்டதாக மக்களவை சபாநாயகர் டத்தோ அஸார் அஸிசன் ஹருன் அறிவித்தார்.
இந்த வாக்களிப்பின் போது 105 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 95 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த வேளையில் 20 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த மசோதா தொகுதி வாக்களிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று 15க்கும் மேற்பட்ட அவை உறுப்பினர்கள் எழுந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து சபாநாயகர் தொகுதி வாக்களிப்புக்கு அனுமதி வழங்கினார்.
முன்னதாக, பிரதமர் துறைக்கான 2021ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதாவின் நிர்வாக குழு நிலையிலான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய பிரதமர் துறையின் (சிறப்பு விவகாரங்களுக்கான) அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ரிட்சுவான் முகமது யூசுப், நிர்வாகத் துறையில் அதிகமான உறுப்பினர்கள் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தது தொடர்பில் பதிலளித்தார்.
அரசாங்கத்தின் தேவையின் அடிப்படையில் அதாவது அரசாங்கத் திட்டங்கள் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக அந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் இருந்ததை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் தேசிய கூட்டணியில் உள்ள நிர்வாகத் துறை உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என கூற முடியாது. தேவையின் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களின் எண்ணிக்கை அமைகின்றன என்றார் அவர்.


Pengarang :