MEDIA STATEMENTSELANGOR

மரண சகாய நிதி மீண்டும் அமல்- ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வரவேற்பு

ஷா ஆலம், நவ 1- சிலாங்கூர் மாநிலத்தில் மரண சகாய நிதி மீண்டும் அமல் படுத்தப்பட்டது குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மரண சகாய நிதி திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற பொது
மக்களின் எதிர்பார்ப்புக்கு மாநில அரசு மதிப்பளித்துள்ளதை இந்நடவடிக்கை 
காட்டுகிறது என்று பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்-
பினரான அவர் குறிப்பிட்டார்.

முதியோர் பரிவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த மரண சகாய நிதி 
தற்போதைய கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் பொதுமக்களின் சுமையை பெரிதும் குறைக்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

மரண சகாய நிதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற மந்திரி புசார் 
அவர்களின் அறிவிப்பை பெரிதும் வரவேற்கிறேன். இத்திட்டத்திற்கு மாற்றாக 
அமல்படுத்தப்பட்ட பிறந்தநாளில் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டமும் தொடரப்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்ட மரண சகாய நிதி திட்டம் 
அடுத்தாண்டு மீண்டும் தொடரப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ 
அமிருடின் ஷாரி கடந்த வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது அறிவித்தார்.

Pengarang :