ECONOMYSELANGORYB ACTIVITIES

விநியோகத் தடையை சரி செய்யும் விஷயத்தில் நீரையும் மின்சாரத்தையும் ஒப்பிடக் கூடாது- ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் கூறுகிறார்

ஷா ஆலம், நவ 27- நீர் விநியோகத் தடையை சரி செய்யும் பணியுடன் தடைபட்ட மின் இணைப்பை மீண்டும் ஏற்படுத்தும் பணியுடன் ஒப்பிடக்கூடாது என்று பொது மற்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
நீர் விநியோகத்தை மீண்டும் ஏற்படுத்தும் விஷயத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நீர் அழுத்தம் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதால் அப்பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படும் என்று அவர் சொன்னார்.
நீர் மாசுபாடு பிரச்னையை வெற்றிகரமாக கையாண்ட பின்னர் முதல் கட்டமாக நீர் சமநிலை குளத்திற்கு பாய்ச்சப்படும். இதற்கு 12 மணி நேரம் பிடிக்கும். பின்னர் முதலாவது குளம் மற்றும் சேவை குளம் ஆகியவை நிரப்பப்பட்டப் பின்னரே பொதுமக்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படும் என்றார் அவர்.
அதோடு மட்டுமின்றி பயனீட்டாளர்கள் வசிக்கும் இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதன் காரணமாக சில இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்ப நான்கு நாட்கள் வரை ஆகிறது. நீர் விநியோகத்தை வழக்க நிலைக்கு கொண்டு வருவதில் குறுக்கு வழி என்று எதுவும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :