NATIONALWANITA & KEBAJIKAN

நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் இன்று முதல்  நிமோகோகல் தடுப்பூசி போடும் திட்டம் அமல்

ரவுப், டிச 1- தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் சிறார்களுக்க நிமோகோகல் தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் உள்ள அரசாங்கம் சுகாதார மையங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இத்திட்டத்தின் வழி சுமார் ஐந்து லட்சம் சிறார்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். பிறந்த நான்காவது மாதம், ஆறாவது மாதம் மற்றும் 15வது மாதம் என மூன்று கட்டங்களாக இந்த தடுப்பூசி போடப்படும் என்றார் அவர்.

நிமோகோகல் பாக்டீரியா பரவலைத் தடுப்பதில் இந்த தடுப்பூசி ஆக்ககரமான பலனைத் தருகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டை குறைப்பதிலும் இது மறைமுக பலனைத் தருகிறது. மேலும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயன்மிக்கதாகவும் விளங்குகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2017இல் 17,446ஆக இருந்த நிமோகோகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 19,773ஆக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைக் கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசித் திட்டம்  தக்க தருணத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றார்.

தேசிய நிலையிலான நிமோகோகல் தடுப்பூசித் திட்டத்தை .இங்குள்ள சுகாதார மையத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :