EVENTSELANGORSUKANKINI

விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியச் சட்டத்தை இயற்றுவீர்- மத்திய அரசுக்கு சிலாங்கூர் கோரிக்கை

ஷா ஆலம், டிச 2– ஓய்வு காலத்தில் விளையாட்டாளர்கள் ஓய்வூதியம் பெறும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியச் சட்டத்தை இயற்றும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டாளர்கள் பலர் வாழ்க்கையில் சிரமத்தை எதிர்நோக்குவது தொடர்பில் பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

தற்போது ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கின்றனர். இதர விளையாட்டுகள் முத்திரை பதித்தவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்குரிய வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அனைத்துலக போட்டிகளில் நாட்டை பிரதிநிதித்து பங்கேற்றவர்களுக்கும்  உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாகும். விளையாட்டில் பெற்ற பதக்கங்களை விற்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் நலிவுறும் நிலைமை விளையாட்டாளர்களுக்கு ஏற்படக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்

விளையாட்டாளர்களுக்கான ஓய்வூதியச் சட்டத்தை இயற்றுவதன் வழி மேலும் அதிகமான இளையோர் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஓய்வு காலத்தில் நிரந்தர வருமானம் கிடைப்பதற்குரிய உத்தரவாதம் உள்ளது என்ற நம்பிக்கையில் அதிகமானோர் விளையாட்டுத் துறையின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவர் எனவும் அவர் சொன்னார்.

ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் நிரந்தர வருமானத் திட்டத்தின் கீழ் தற்போது அவ்விரு போட்டிகளிலும் பதக்கம் வென்றவர்களுக்கு  மட்டுமே ஆயுள் முழுமைக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அப்போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு பத்து லட்சம் வெள்ளி ரொக்கமும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக 5,000 வெள்ளியும் வழங்கப்படும். வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு மூன்று லட்சம் வெள்ளி வெகுமதியாகவும் 3,000 வெள்ளி ஓய்வூதியத் தொகையாகவும் வழங்கப்படும் வேளையில் வெண்கலப்பதக்கம் வென்றவர்கள் ஒரு லட்சம் வெள்ளியை வெகுமதியாகவும் 2,000 வெள்ளியை ஓய்வூதியமாகவும் பெறுகின்றனர்.


Pengarang :