ACTIVITIES AND ADSNATIONALSELANGORYB ACTIVITIES

அரசாங்க ஒதுக்கீடு முழுமையாக மக்கள் நலனுக்கு பயன்படுத்தப்படும்- ஷா ஆலம் எம்.பி. காலிட் சமாட் உறுதி

ஷா ஆலம், ஜன 24- சிலாங்கூர் அரசின் கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் வாயிலாக மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி முழுமையாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் கூறினார்.

இதன் தொடர்பான திட்டங்களை அமலாக்குவதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் தாம் இணைந்து செயல்படவுள்ளதாக அவர் சொன்னார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு நிதி வழங்கும் மாநில அரசின் திட்டத்தை தாம் வரவேற்பதாகக் கூறிய அவர், மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.

சிலாங்கூரைப் பொறுத்த வரை மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகள் ஆக்ககரமான முறையில் செயல்படுவதாக  அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கு ஏதுவாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். இதன் வழி திட்ட அமலாக்கங்களில் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது என்றார் அவர்.

இங்குள்ள செல்கேர் கிளினிக்கில் ஆர்.டி.கே. ஆண்டிஜென் விரைவுச் சோதனை திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசு தலா ஒரு லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளது.

மாநிலத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 50,000 வெள்ளி இதே நோக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.


Pengarang :