ANTARABANGSASAINS & INOVASI

அஸ்ட்ராஸினேகா கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்

புது டில்லி, ஜன 3- அஸ்ட்ராஸினேகா மற்றும் ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்திய ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் வழி, உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் மிகப்பெரிய அளவிலான கோவிட்-19 தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கப்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு இந்திய அரசாங்கம் கடந்த வெள்ளியன்று ஒப்புதல் வழங்கியதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகர் கூறினார்.

அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கோவிட்-19 நோய்த் தொற்று கண்ட நாடாக விளங்கும் இந்தியா இந்த தடுப்பூசியை அவசரத் தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவாஸின், ஸிடுஸ் கேடிலாஸ் ஸிகோவி-டி மற்றும் ரஷிய தயாரிப்பான ஸ்பாட்னிக்-வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

குறைந்தது நான்கு தடுப்பூசிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒரே நாடாக இந்தியா விளங்குவதாக பிரகாஷ் கூறினார்.

அவற்றில் ஒன்று அதாவது செரும்ஸ் நிறுவனத்தின் கோவிஷில்ட் தடுப்பூசி அவசரத் தேவைக்குப் பயன்படுத்துவதற்காக  கடந்த வெள்ளியன்று அங்கீகரிக்கப்பட்டது என்றார் அவர். அஸ்ட்ராஸினேகா/ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உள்நாட்டு நிறுவனமான செரும் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியா தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகளுக்கு போடப்படும் தடுப்பூசியின் அளவு மற்றும் இதர விபரங்களை இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :