ACTIVITIES AND ADSECONOMYNATIONALPBTSELANGOR

இரண்டாயிரம் பேருக்கு  கோவிட்-19 சோதனை- கோத்தா அங்கிரிக் தொகுதி இலக்கு

ஷா ஆலம், ஜன 23– கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் குறைந்த பட்சம் 50 வெள்ளி கட்டணத்தில் நடத்தப்படும் கோவிட்-19 நோய் பரிசோதனை இயக்கத்தின் வழி சுமார் 2,000 பேர் வரை பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிசோதனை இயக்கத்தில் ஆண்டிஜென் (ஆர்.டி.கே-ஏஜி) பரிசோதனைக்  கருவி பயன்படுத்தப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

செல்கேட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நேற்று தொடங்கிய இந்த  பரிசோதனை இயக்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் அண்மைய காலமாக கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனைக்கு 140 வெள்ளி வரை செலவு பிடிக்கும். இது பொதுமக்களுக்கு மிகுந்த சுமையைத் தரும். ஆகவே இந்த இயக்கத்தின் வாயிலாக அந்த கட்டணத்தில் ஒரு பகுதியை நாங்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளோம் என்றார் அவர்.

குறைந்த கட்டணத்திலான இந்த சோதனை இயக்கம் பொதுமக்களுக்கு நிம்மதியைத் தரும் அதேவேளையில் தங்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவும் உதவும் என்றும் அவர் கூறினார்.

இந்த இயக்கம் தொடங்கிய மூன்று நாட்களில் அவசரமாக நோய்த் தொற்று பரிசோதனை செய்யும் கட்டாயத்தில் உள்ள வெளியார் உள்பட 200 பேர் தங்களை பதிந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள கோத்தா அங்கிரிக் தொகுதிக்கு அப்பால் உள்ளவர்கள் செய்யும் விண்ணப்பத்தையும் பரிசீலிக்க தாங்கள் தயாராக உள்ளதாக கூறிய அவர், இதன் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 018-4004510 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

 


Pengarang :