ECONOMYNATIONAL

இரவு 10.00 மணி வரை செயல்பட உணவங்களுக்கு அனுமதி- அரசாங்கம் பரிசீலனை

ஷா ஆலம், ஜன 20- உணவகங்கள் இரவு 10.00 மணி  வரை செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது.

இவ்விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுடன் விவாதிக்கும்படி தேசிய பாதுகாப்பு மன்றத்தை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இரவு 8.00 மணிக்குப் பிறகு உணவு கிடைப்பது சிரமமாக உள்ளதால் அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 வரை உணவகங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

ஆகவே, இதன் தொடர்பில் சுகாதார அமைச்சின் கருத்தைப் பெறும்படி தேசிய பாதுகாப்பு மன்றத்தை நான் பணித்துள்ளேன். இறுதி முடிவு எட்டப்பட்டால் அது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார் அவர்.

உணவகங்கள் இரவு மணி 8.00 வரை அல்லாமல் லைசென்சில் குறிப்பிட்ட நேரம் வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம்  முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர்.


Pengarang :