ECONOMYNATIONALYB ACTIVITIES

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவீர்- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜன 24– ‘மோரட்டோரியம்‘ எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்தும்படி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அமல்படுத்தப்பட்டதைப் போல் கடனைத் திரும்பச் செலுத்துவதை இயல்பாக ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கும் நடைமுறையை அரசு அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஆறு மாதங்களுக்கு இயல்பாக ஒத்தி வைக்கும் நடைமுறையை அமல்படுத்துவதன் மூலம் பொருளாதரத் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்று கூட்டறிக்கை ஒன்றில் அந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்த  தொழில்துறையினர் மத்தியில்  பணக்கையிருப்பு அதிகரிக்கும். இதன் மூலம் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் தொழிலாளர்களை  நிலை நிறுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பாதிக்கப்படாதவர்கள் வழக்கம் போல் தங்கள் கடனை தொடர்ந்து திரும்பச் செலுத்தி வரலாம் என்றும் அவர்கள் கூறினர்.

மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோருக்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் வழங்கும் 600 வெள்ளி சம்பள உதவித் தொகை உயர்த்தப்பட  வேண்டும் என்பதோடு அத்தொகையை வழங்கும் காலம் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தினர்.

விற்பனை பாதிப்பினாலும் குறைவான பணப்புழக்கம் காரணமாகவும் சிரமத்தை எதிர்நோக்கும் முதலாளிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாக்கு பிடிப்பதற்கும் தங்கள் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாமலிருப்பதற்கும் சொக்சோவின் இந்த சம்பள உதவித் திட்டம் துணை புரியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Pengarang :