MEDIA STATEMENTNATIONALSELANGORYB ACTIVITIES

கெடாவில் தைப்பூச விடுமுறை ரத்து: இந்திய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி- டாக்டர் சேவியர் கண்டனம்

ஷா ஆலம், ஜன, 21– கெடா மாநிலத்தில் தைப்பூச விடுமுறையை ரத்து செய்வதற்கு அம்மாநில அரசு எடுத்துள்ள முடிவு இந்திய சமூகத்திற்கு குறிப்பாக இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பெரிக்காத்தான் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கெடா அரசின் இச்செயல்,  சிறுபான்மை மக்களின் உரிமைகளை சிறுகச் சிறுக பறிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 28 ஆம் தேதி கொண்டாடப்படவிருந்த தைப்பூச விழா  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் அன்றைய தினம் வழங்கப்படும்  மாநில அளவிலான பொது விடுமுறையும் மீட்டுக் கொள்ளப்படுவதாக கெடா மந்திரி புசார் முகமது சனுசி முகமது நோர் கூறியிருந்தது தொடர்பில் டாக்டர் சேவியர் இவ்வாறு கருத்துரைத்தார்.

கடந்தாண்டு தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்தது முதல் கெடா மாநில பாஸ் அரசாங்கம் இந்தியர்களுக்கெதிரான அணுகுமுறையை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. கடந்த டிசம்பர் நிகழ்ந்த அலோர்ஸ்டார், ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலய உடைப்பு, கள் குடித்தவர்கள் போல் பேசுகின்றனர் என்ற இந்திய தலைவர்களுக்கு எதிரான மந்திரி புசாரின் அநாகரீக பேச்சு, தைப்பூச விடுமுறை ரத்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என அவர் தெரிவித்தார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து  ஒரு பல இன சமய  தேசமாக உருவெடுத்த மலேசியாவை ஒரே இனம் உரிமைக்கொண்டாட வழி வகுத்தது ம இ கா. இன்று தேசிய அளவில் பாஸ்சுடன் கூட்டாச்சியை நடத்துகிறது. ஆகையால் கெடா அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மஇகா விற்கு முழு பங்குண்டு.

சுய வாழ்வுக்காக, பதவிக்காக இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தியர்களின் எதிர்காலத்தை ம .இ.க பணயம் வைக்கபோகிறது என்று கேள்வி எழுப்பினார் டத்தோ டாக்டர் சேவியர்.

 


Pengarang :