MEDIA STATEMENTPBTSELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முனைப்புடன் செயலாற்றுவீர்-  அரசு பணியாளர்களுக்கு கோரிக்கை

ஷா ஆலம், ஜன 21- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் ஏற்படக்கூடிய பல்வேறு
 சவால்களை எதிர்கொள்வதில் அரசு ஊழியர்கள் முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

இதேபோன்ற சூழ்நிலையை எதிர் நோக்கும் மக்களுக்கு உதவிகள் நல்குவதில் அரசாங்க ஊழியர்களின் மனவுறுதி முக்கிய அளவுகோளாக விளங்குவதாக அவர் சொன்னார்.

நாம் அனுபவம் பெற்றவர்களாக இருந்த போதிலும் இனி நாம் எதிர் நோக்கும் சவால்கள்  மாறுபட்டவையாக இருக்கும் என்பதோடு  பொது முடக்கம் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார பாதுகாப்பினால்  அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்றார் அவர்.

நிர்வாக பொறுப்பில் இருக்கும் அரசு பணியாளர்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த 
தவறினால் அனைத்தும் தரைமட்டமாக நொறுங்கிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்தாண்டு தொடக்கத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதல் 
உண்டான பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் அரசு ஊழியர்கள் காட்டிய அர்ப்பண உணர்வுக்கு மந்திரி புசார் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு சமயத்தில் 
சுழியத்தை எட்டியது. ஆனால், நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்த காரணத்தால் பொது முடக்கத்தை மறுபடியும் அமல்படுத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றார் அவர்.

Pengarang :