ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 நோய் அதிகரிப்புக்கு அதிகமான மக்கள் தொகையும் காரணம்- மந்திரி புசார் விளக்கம்

ஷா ஆலம், ஜன 28- சிலாங்கூரில் அண்மைய காலமாக கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு அம்சங்கள் காரணமாக விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் குறிப்பாக நகர்ப்புறங்களில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகையும் அக்காரணங்களில் ஒன்றாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

தினசரி நான்கு இலக்கங்களை தொடும் அளவுக்கு தீவிரமடைந்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சிலாங்கூர் மாநில மக்களை கவலையடையச் செய்துள்ளது. கடந்த மாதம் முதல் இந்த எண்ணிக்கை நான்கு இலக்கத்திலிருந்து இரண்டு இலக்கத்திற்கு குறையவேயில்லை என்றார் அவர்.

இதன் காரணமாகவே எஸ்.ஓ.பி. விதிமுறைகளை பின்பற்றி நடக்கும்படி மாநில மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக சிலாங்கூர் மாநில அரசு இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் இப்பெருந்தொற்று பரவியது முதல் 19,000க்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் இந்நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிவதில் சுகாதார அமைச்சுக்கு உதவும் வகையில் மேலும் 50,000 கோவிட்-19 இலவச பரிசோதனைகளை  மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

சிலாங்கூரில் கோவிட்-19  நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.  இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும் என்றார் அவர்.


Pengarang :