ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள்- மத்திய அரசின் பரிந்துரை மீது ஆய்வு

ஷா ஆலம், ஜன 28– சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகளை அமைப்பது தொடர்பான மத்திய  அரசின் பரிந்துரை ஆராயப்பட்டு வருகிறது. 

இந்த நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள், சுற்றுசூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் உண்டாகும் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இத்திட்டங்கள் யாவும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறிய அவர், வழித் தடங்களை பரிந்துரைப்பதற்கும் மாநில அரசு நிலையில் இது குறித்து முடிவெடுப்பதற்கும் தங்களை அவர்கள் அணுகியுள்ளதாக தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஆராயவுள்ளோம். சீரான போக்குவரத்துக்கு உதவும் என்பதால் இத்தகைய பரிந்துரைகளை நாங்கள் பொதுவாக நிராகரிப்பதில்லை. எனினும், பிற்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இத்திட்டத்திற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றார் அவர்.

பரிந்துரைக்கப்பட்ட அந்த திட்டங்களில் ஒன்று பாங்கி மற்றும் புத்ரா ஜெயாவை இணைக்கும் நெடுஞ்சாலை திட்டமாகும் எனக் குறிப்பிட்ட அவர், சுங்கை லங்காட் ஆற்றின் வழித்தடத்தை சம்பந்தப்படுத்திய  இத்திட்டம் குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகச் சொன்னார்.

இத்திட்டம் ஆற்றுக்கு கடுமையான விளைவுகளையும், மாசுபாட்டையும் ஏற்படுத்தும் என்பதோடு அங்கு குடியிருப்போரையும் அப்புறப்படுத்த வேண்டி வரும் என நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே இத்திட்டத்திற்கு அனுமதியளிப்பதற்கு முன்னர் இது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.


Pengarang :