ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

நான்கு மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைகிறது

கோலாலம்பூர், ஜன 7– தொடர்ச்சியாக பெய்து வரும் கனத்த மழை காரணமாக பகாங், கிளந்தான், திரங்கானு, பேராக் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது.

இதன் காரணமாக அந்த மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில்  அடைக்கலம் நாடுவோரின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியுள்ளது.

எனினும், சபா மற்றும் ஜோகூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதோடு துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

பகாங் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையல்  அங்கு 24,257 பேர் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 281 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கிழக்குக் கரை நெடுஞ்சாலையின் லஞ்சாங் நகரையொட்டிய 113 முதல் 115வது கிலோமீட்டர் வரையிலான பகுதியின் இது தடங்களும் வெள்ளம் காரணமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அந்த நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் கூறியது.

கிளந்தானில் 4,829 வெள்ள அகதிகள் 64 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அம்மாநிலத்தில் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை 2,142ஆக இருந்தது.

திரங்கானு மாநிலத்தில் நேற்று 910ஆக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று 5,243 ஆக உயர்ந்துள்ளது.

பேராக் மாநிலத்தில் நேற்று புதிதாக 16 பேர் வெள்ள நிவராண மையங்களில் சேர்க்கப்பட்டனர். இதன் வழி அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐந்து துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 


Pengarang :