ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONALYB ACTIVITIES

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட உதவி- செந்தோசா தொகுதி வழங்கியது

கிள்ளான், ஜன 24– பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையிலான தொண்டூழியக் குழு இரண்டாம் கட்ட உதவியை கடந்த சனிக்கிழமை வழங்கியது.

கிள்ளான் சென்ட்ரல் ரோட்டரி கிளப் மற்றும் கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் உறுப்பினர்களை உள்ளடக்கிய முப்பது பேர் கொண்ட தொண்டூழியக் குழுவினர் 13 நான்கு சக்கர இயக்க வாகனங்கள் மற்றும் இரு லோரிகளில் இந்த நிவாரண பயணத் திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த உதவித் திட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை தெமர்லோ கெஅடிலான் கட்சியின் தொகுதி துணைத் தலைவர் திரு. வடி மேற்கொண்டார். இந்த உதவித் திட்டத்தில் லஞ்சாங், மெந்தகாப், தெமர்லோ ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பத்தினர் பயன் பெற்றனர்.

அவர்களுக்கு உணவுப் பொருள்கள், சமையல் அடுப்பு, மெத்தை, தலையணை போன்ற படுக்கையறைப் பொருள்கள், சமையல் உபகரணங்கள், உடைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த வெள்ளப் பேரிடரில் உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அவதியுறும் இவ்வட்டார மக்களுக்கு தங்களின் இந்த உதவி ஆறுதலை தரும் என்பதோடு ஓரளவு சுமையையும் குறைக்கும் என்று தாங்கள் நம்புவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.

இந்த நிவாரண உதவித் திட்டத்திற்கு உதவி வழங்கியவர்கள், தொண்டூழியர்கள் காவல் துறையினர், தெமர்லோ வெள்ள நடவடிக்கை அறையின் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :