ALAM SEKITAR & CUACAANTARABANGSANATIONAL

பூமியின் சூழற்சி அதிகரிப்பு- 2021ஆம் ஆண்டு விரைந்து கடந்து போகும்

மாஸ்கோ, ஜன 14- பூமியின் சூழற்சி வேக அதிகரிப்பு  காரணமாக கடந்தாண்டை விட 2021ஆம் ஆண்டு குறுகிய கால அளவைக் கொண்டதாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்த  வேக அதிகரிப்பினால் யு.டி.சி. எனப்படும் சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரத்தில் ஒரு விநாடி குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷிய வானிலை ஆய்வுக் கழகம் கூறியது.

பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து வருவதாகவும் இதனால் ஒரு தினத்தின் கால அளவு 24 மணி நேரத்தை விட குறைவாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் அண்மைய ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

கடந்தாண்டில் 28 நாட்கள் 24 மணி நேரத்தை விட குறைவான கால அளவைக் கொண்டிருந்தன. வானிலை ஆய்வு 1960ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இது போன்ற சம்பவம் பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இதில் கடந்தாண்டு ஜூலை மாதம் 19ஆம்  நாள் வழக்கத்தை விட 1.4 மில்லி விநாடி குறைவாகப் பதிவானது.

நாட்களின் கால அளவு குறைவாகி வருவதை பூர்வாங்க கணிப்புகள் புலப்படுத்துவது உண்மைதான். ஆனால், புவியின் நடப்பு சூழற்சி வேகம் தொடர்ந்தால் மட்டுமே இது உறுதியாகும் என்று ரஷிய வானிலை ஆய்வுக் கழகத்தின் பேச்சாளர் கூறினார்.

பூமி பல ஆண்டுகளாக தனது அச்சில் 24 மணி நேரத்தை விட வேகமாக சூழன்று வந்தது. இதனால் ஏற்பட்ட நேர மாற்றத்தை சமன்படுத்த விஞ்ஞானிகள் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு விநாடியை யு.டி.சி. எனப்படும் சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரத்தில் சேர்த்து வந்தனர்.

ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்த நேர மாற்றம் ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. இதனால், யு.டி.சி.யில் கூடுதல் நேரத்தை சேர்க்க வேண்டிய அவசியம் விஞ்ஞானிகளுக்கு ஏற்படவில்லை.

பூமியின் சூழற்சி வேகம் தற்போதைய அளவில் தொடர்ந்தால் யு.டி.சி.யில் நேரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக சில விநாடிகளை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று அந்த பேச்சாளர் சொன்னார்.


Pengarang :