NATIONALSELANGOR

பெஸ்தாரி ஜெயாவில் நிலம் அமிழ்ந்தது- 67 பேர் இடமாற்றம்

ஷா ஆலம், ஜன 17– பெஸ்தாரி ஜெயாவிலுள்ள காலி நிலம் ஒன்றில் நேற்று முன்தினம் நில அமிழ்வு ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள இரு தொழிற்சாலைகளைச் சேர்ந்த 67 தொழிலாளர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

மாலை மணி 6.50 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத்  தொடர்ந்து அந்த தொழிற்சாலைகளின் ஊழியர்கள் அனைவரும் ரந்தாவ் பாஞ்சாங் தேசிய பள்ளியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் ஹபீஷாம் முகமது நோர் கூறினார்.

கம்போங் பெஸ்தாரி ஜெயா, ஜாலான் பி.கே.பி.எஸ். அருகே 500 x 100 மீட்டர் பரப்பளவில் 10 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

மாலை 6.51 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஏழு வீரர்கள் கொண்ட குழு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த தாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் ஒருவர் மண் சரிவில் புதையுண்டதாக தொடக்கத்தில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்ட போது அத்தகைய சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது உறுதியானது என்றார் அவர்.

அந்த இடத்தில் தொடர்ந்து சிறிய அளவில் மண் சரிவும் நிலம் உள்வாங்கும் சம்பவமும் நிகழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பணிகளை நிறுத்தி நில அமிழ்வு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் தொழிலாளர்களை தற்காலிக நிவாரண மையத்திற்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தை தாங்களும் போலீசாரும் கேட்டுக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :