ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க 7.3 கோடி வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டம்- சிலாங்கூர் மாநில அரசு அறிவிப்பு

ஷா ஆலம், ஜன 20– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் சிலாங்கூர் உதவித் திட்டத்தை  மாநில அரசு அறிவித்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும் மக்களுக்கான உதவித் திட்டங்கள் உள்ளிட்ட  மாநில பொருளாதார நடவடிக்கைகளை மீட்சியுற  வகை செய்யும்  இத் திட்டத்திற்கு 7 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு வரவு செலவுத்  திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகளும் திட்டங்களும் விரைந்து அமல்படுத்தப்படும் என்று மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

விவேகமான ஜனநாயக நடைமுறைக்கேற்பவும் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலுக்கேற்பவும் கோவிட்- 19 பெருந்தொற்று ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் சமாளிக்கும் ஆற்றல் மாநில அரசுக்கு உள்ளது என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மந்திரி புசார் அறிவித்த ஊக்குவிப்புத் திட்டங்கள் வருமாறு-

– சுமார் 60 லட்சம் வெள்ளி செலவில் மூத்த குடிமக்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர், உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு இலவச கோவிட்-19 சோதனை மேற்கொள்வது.

– நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் 24 மணி நேர உடனடி அழைப்பு மையத்தை உட்படுத்திய செலங்கா செயலியின் பயன்பாட்டை தரம் உயர்த்துவது.

– 9,822 மருத்துவப் பணியாளர்கள், 3,500  காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கான உணவுத் திட்டத்திற்காக 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு.

– கோவிட்-19 நோய்த் தொற்று தாக்கம் குறைவாக உள்ளவர்களை செர்டாங் மலேசிய விவசாய பல்கலைக்கழக கண்காட்சி பூங்காவில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்களை பயன்படுத்துவது.

– அரிசி, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதற்கு ஏதுவாக மக்கள் சிறப்பு நட்புறவுத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐம்பதாயிரம் வெள்ளியும் வழங்குவது.

– பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 2,361 பேருக்கு ஜனவரி மாத  வாடகை விலக்களிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வாடகை ஒத்தி வைப்பு திட்டத்திற்கும் விவேக வாடகைத் திட்டத்தின்  பங்கேற்ற 450 பேருக்கு ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களுக்கு வாடகையை ஒத்தி வைக்கும் திட்டத்திற்கும் 27 லட்சம் வெள்ளி  ஒதுக்கீடு.

– யாயாசான் சிலாங்கூரில் கடன் பெற்ற 762 பேரின் 71 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளிக் கடன் தொகையை தள்ளுபடி செய்வது.

– டாக்சி ஓட்டுநர்கள், பள்ளி பஸ் ஒட்டுநர்கள், பிபிஆர் திட்ட வாடகை குடியிருப்பாளர்கள், திடக்கழிவு லோரி ஓட்டுநர்கள் மற்றும் பூர்வக்குடியினருக்கான உணவுத் திட்டத்திற்கு 13 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

– மீனவர்களுக்கான 300 வெள்ளி பெட்ரோல் பற்றுச்சீட்டு, கால்நடை தீவனம், விவசாயிகளுக்கான உணவுப் பொருள் விநியோகம்  ஆகிய நோக்கங்களுக்காக 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

– மருத்துவமனைகள்  மற்றும் தற்காலிக மையங்களில் முன்களப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக பாலர் பள்ளி மற்றும் சிறார் பராமரிப்பு மையங்கள் அமைக்க முன்களப் பணியாளர் பிள்ளைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

– விவேக கற்றல் திட்டம், எஸ்.பி.எம். மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி உள்பட பல்வேறு கல்வித் திட்டங்களை வழங்கக்கூடிய ePTRS.my அகப்பக்கம் வாயிலாக டியூஷன் ராக்யாட் அகப்பக்கத்தை தொடக்குவது

 

 

 


Pengarang :