MEDIA STATEMENTNATIONALSAINS & INOVASI

மூன்றாவது காலாண்டில்தான் கோவிட்-19  தடுப்பூசி கிடைக்குமா? கைரியின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது- டாக்ட சேவியர் கருத்து

கோலாலம்பூர், ஜன 15– நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு மூன்றாவது காலாண்டில் அல்லது அதற்கு பின்னர்தான் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்ற அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் துறை  அமைச்சர் கைரி ஜமாலுடினின் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று கெஅடிலான்  கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

அந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்யத் தவறி விட்டதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அதிக அக்கறை காட்டி வந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

2021 மூன்றாவது காலாண்டிற்குப் பிறகு அதாவது எட்டு மாதங்களுக்குப் பின்னர் பெரும்பாலான மலேசியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் கிடைக்கும் என கைரி ஜமாலுடின் கூறியதாக வெளிவந்த பத்திரிகைத் தகவல்கள் தொடர்பில் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான சேவியர் இவ்வாறு கருத்துரைத்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதோடு முறையான திட்டமிடலும் அரசாங்கத்திடம் இல்லாததை இது காட்டுகிறது. பெரிக்காத்தான் அரசாங்கம் சதா அரசியல் நடத்துவதை விடுத்து மக்கள் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

நிலைமையைக் கையாளும் ஆற்றல் இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பதவி துறக்க வேண்டும். ஏனென்றால் நாடாளுமன்றத்தில் நடப்பு அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டது தெளிவாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்றாவது காலாண்டில் அல்லது அதற்குப் பின்னரும் பெரும்பாலான மலேசியர்களுக்கு பெரும்பாலான மலேசியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி கிடைக்காது என்று கைரி கூறியதாக தி ஸ்டார் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தடுப்பூசியை வழங்குவதில் முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

நீங்கள் ஆரோக்கியமானவராகவும் 60 வயதுக்கு குறைவானவராகவும் முன்களப் பணியாளராக  இல்லாதவராகவும் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தடுப்பூசி செலுத்தும் காலம் மூன்றாவது காலாண்டில் அல்லது அதற்குப் பின்னர்தான் வரும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :