ECONOMYPBT

லைசன்ஸ் இல்லாத வணிகர்களுக்கு அபராதம்- செலாயாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், ஜன 21– அனுமதியின்றி வியாபாரம் செய்த 21 சிறு மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்துள்ளது. லைசன்ஸ் இன்றி செயல்பட்டது, நடை பாதைகளில் இடையூறு ஏற்படுத்தியது,  பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பை உண்டாகியது போன்ற குற்றங்களுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக நகராண்மைக் கழக வர்த்தகத் துறை இயக்குனர் முகமது ஜின் மசூட் கூறினார்.

அமலாக்க அதிகாரிகள் 263 இடங்களில் சோதனை மேற்கொண்டதாகக் கூறிய அவர், அவற்றில் இரு இடங்களில் வியாபார பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் ஆறு கடைகளுக்கு வியாபாரத்தை நிறுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வணிகர்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார். கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பொது சந்தைகள், கடைகள் மற்றும் பேரங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய நகராண்மைக் கழகம் நேற்று விரிவான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.


Pengarang :