ANTARABANGSAEVENT

விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை

ஜாகர்த்தா, ஜன 10– இந்தோனேசியாவின் செரிபு தீவுக்கூட்டத்தின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படும் ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை.

அந்த விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் து தரகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

நேற்று மேற்கு இந்தோனேசிய நேரப்படி மாலை 2.36 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகார்னோ ஹத்தா விமான நிலையத்திலிருந்து பொந்தியானாக் நோக்கி புறப்பட்ட அந்த போயிங் 737-500 ரக விமானம் நான்கு நிமிடங்களில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 62 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானம்  கடலில் விழுந்ததைக் தாங்கள் கண்டதாக அப்பகுதியிலுள்ள மீனவர்கள் கூறினர் என்று ஜாகர்த்தா நகர போலீஸ் தலைவர் யூஸ்ரி யூனுஸ் தெரிவித்தார்.

கடலில் மிதந்ததாகக் கூறப்படும் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை மீனவர்கள் காட்டும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

பல்வேறு அரசு துறைகளை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக யூஸ்ரி யூனுஸ் தெரிவித்தார்.


Pengarang :