ECONOMYSELANGORYB ACTIVITIES

வீட்டு வாடகையை இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்க பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு அனுமதி

ஷா ஆலம், ஜன 23- வீட்டு வாடகை செலுத்துவதை இரு மாதங்கள் வரை ஒத்தி வைக்க பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்பு குடியிருப்பாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வாடகை செலுத்துவது ஒத்தி வைக்கப்படுவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இந்த இரு மாதங்களுக்கான வாடகையை அடுத்து வரும் மாதங்களில் குடியிருப்பாளர்கள் கட்டங் கட்டமாக செலுத்தலாம் எனக்கூறிய அவர், அந்த வாடகையை முழுமையாக செலுத்தி முடிப்பதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்றார்.

இரு மாதங்களுக்கான வாடகைத் தொகை 500 வெள்ளியாகும். குடியிருப்பாளர்கள் தங்கள் சக்திக்கேற்ப மாதம் 50 வெள்ளி செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் ஏப்ரல் மாதத்தில் அந்த மாதத்திற்கான வாடகைத் தொகையான 250 வெள்ளியுடன் பழைய வாடகை பாக்கியாக 50 வெள்ளியை கூடுதலாகச் செலுத்த வேண்டும். மக்களின் சுமையைக் குறைப்பதற்கு நாங்கள் அமல்படுத்தும் திட்டம் இதுவாகும் என்று அவர் சொன்னார்.

பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு ஜனவரி மாத வாடகை விலக்களிப்பு அளிக்கப்படுவதோடு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான வாடகையை ஒத்தி வைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த புதன் கிழமை கூறியிருந்தார்.

27 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய இத்திட்டத்தின் வழி பி.பி.ஆர். வீடுகளில் குடியிருக்கும் 2,361 குடியிருப்பாளர்களும் விவேக வாடகைத் திட்டத்தில் பங்கேற்றுள்ள 450 பேரும் பயன்பெறுவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :