Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah
NATIONALSELANGOR

அவசர காலத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டலாம்-  மாமன்னர் கருத்து

கோலாலம்பூர், பிப் 24– அவசர காலத்தின் போது நாடாளுமன்றதைக் கூட்டலாம் என்ற தனது கருத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் ஆலோசனையின் பேரில் பொருத்தமானது என பேரரசர் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என அவர் சொன்னார்.

பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஏற்புடையது என  மாமன்னர் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டவோ அல்லது கலைக்கவோ முடியும் என்று  2021ஆம் ஆண்டு அவசர காலச் சட்டத்தின் (அத்தியாவசிய அதிகாரங்கள்) 14(1)(பி) துணை விதியில் கூறப்பட்டுள்ளதாக இஸ்தானா நெகாராவின் அரச விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி டத்தோ அகமது பாடில் சம்சுடின் கூறினார்.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு அவசர காலம் தடையாக விளங்குகிறது என்ற ஒரு சில தரப்பினரின் கூற்று தவறானது என்பதை இந்த சட்ட அம்சம் புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

கடந்த ஜனவரி  மாதம் 12ஆம் தேதி அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு பிரதமர் முன்வைத்த ஆலோசனையை பேரரசர் ஏற்றுக் கொண்டதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வது மட்டுமே காரணமாக இருந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக, மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ராய்ஸ் யாத்திம் மற்றும் மேலவைத் தலைவர் டத்தோ அஸார் அஜிசான் ஹருண் ஆகியோரை பேரரசர் இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தை அமல்படுத்தும் நாடாக மலேசியா விளங்குகிறது. ஆகவே, நிர்வாகம், நீதித்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து நிர்வாகப் பிரிவுகளும் அந்த கோட்பாட்டை பின்பற்றி நடப்பது அவசியம் என்று பேரரசர் அச்சந்திப்பின் போது வலியுறுத்தினார்.


Pengarang :