ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

இவ்வாண்டில் 50,000 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை- சிலாங்கூர் அரசு இலக்கு

ஷா ஆலம், பிப் 19- இவ்வாண்டில் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை பத்தாயிரம் பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் எஞ்சியவர்களுக்கான சோதனை இவ்வாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த இலவச கோவிட்-19 பரிசோதனைத் திட்டத்திற்கு 60 லட்சம் வெள்ளி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை குறையும் வரை இந்த பரிசோதனை இயக்கம் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 67 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதால் இங்கு நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. எனினும், நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து இத்தகைய சோதனை நடவடிகைகளை மேற்கொண்டு வருவோம் என்றார் அவர்.

பண்டமாரான் ஜெயா, பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது மண்டபங்களில் நடத்தப்படும் சமூக கோவிட்-19  சோதனை இயக்கங்கள் தவிர்த்து பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத முதியோர் இல்லங்களிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

முதியோர் இல்லங்களில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையங்களில் சிகிச்சை பெறுவோருக்கும் கோவிட்-19 சோதனை நடத்தப்படும் என்றார் அவர்.


Pengarang :