ACTIVITIES AND ADSSELANGOR

ஊழலில் ஈடுபடுவோர் விரைந்து தண்டிக்கப்பட  வேண்டும்- சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

ஷா ஆலம், பிப் 4-  ஊழலில் ஈடுபடுவோர் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தால் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தினார்.

மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்கும் பொருட்டு ஊழலில் சிக்கியவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவது அவசியம் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

நாட்டில் நிகழும் ஊழல் சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்டவை என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியதை கேட்டு தாம் அதிர்ச்சியடைந்தாக அவர் சொன்னார்.

ஆகவே, ஊழலை ஒழிக்கும் பணியில் தீவிரமாக செயல்படும்படி ஊழல் தடுப்பு ஆணையத்தை தாம் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழலும் அவதூறு பரப்பும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் முதன்மை எதிரிகளான இத்தகைய செயல்கள் நாட்டையே அழித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

அரசியல் ரீதியாக நாட்டில் பிளவு ஏற்படுவதற்கும்  அனைத்துலக நிலையில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதற்கும் இவ்விரு செயல்களும் முக்கிய காரணமாக விளங்குவதாகவும் அவர் சொன்னார்.

இத்தகைய நெறியற்ற செயல்களை தடுப்பதில் நாட்டு மக்கள் முக்கிய பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Pengarang :