ECONOMYPENDIDIKANSELANGORYB ACTIVITIES

கணினி விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கு திடீர் வருகை- கின்ராரா தொகுதி நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா, பிப் 28– இலவச கணினி பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் வீடுகளுக்கு திடீர் வருகை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப நிலையை நேரில் கண்டறியும் நடைமுறை மேற்கொள்ளப்படவிருப்பதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

மாநில அரசினால் வழங்கப்படும் இலவச கணினிகள் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொகுதி உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட செர்டேக் கின்ராரா திட்டத்தின் கீழ் இலவச கணினிகளுக்கு  500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்க தாங்கள் முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.

எங்கள் வசம் தற்போது 100 கணினிகள் மட்டுமே உள்ளன. ஆகவே, உண்மையிலேயே தகுதி உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.

கணினிக்கான விண்ணப்பம் கிடைத்தவுடன் எங்கள் தொகுதி சேவை மையத்தில் உள்ள பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டிற்கு திடீர் வருகை புரிந்து நிலவரங்களை நேரில் கண்டறிந்து இலவச கணினி பெறுவதற்கு தகுதி உள்ளவர்தானா? என்பதை தீர்மானிப்பர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கின்ராரா தொகுதியிலுள்ள சேவை மையத்தில் இன்று 20 மாணவர்களுக்கு இலவச கணினிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இலவச கணினிகளை வாங்குவதற்கான நிதி தொகுதி சேவை மையத்தின் வாயிலாகவும் பொதுமக்கள் அளித்த நன்கொடையின் வழியாகவும் பெறப்பட்டதாக ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :