NATIONALSELANGOR

சிலாங்கூரிலுள்ள 6 மருத்துவமனைகள்  தடுப்பூசி சேமிப்பு மையங்களாகச் செயல்படும்

ஷா ஆலம், பிப் 26– கோவிட்-19 தடுப்பூசி சேமிப்பு மையங்களாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஆறு மருத்துவமனைகள் செயல்படும். தடுப்பூசி இயக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் சுகாதார மையங்களுக்கு இங்கிருந்து தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை, அம்பாங் மருத்துவமனை மற்றும் தஞ்சோங் காராங் மருத்துவமனை ஆகியவையே அந்த ஆறு மருத்துவமனைகளாகும்.

தடுப்பூசிகள் பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மின்சார விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டப் பின்னர் அந்த ஆறு மருத்துவமனைகளும் இந்நோக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத்துறை  இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

மின் விநியோகம் தடைபடும் பட்சத்தில் தொடர்ச்சியான  மின் சக்தியைப் பெறும் வகையில் தானியங்கி விசையுடன் கூடிய  மின் உற்பத்தி இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 சுகாதார கிளினிக்குகளும் 14 மருத்துவமனைகளும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையங்களாக செயல்படும் என்று  துணை சுகாதார அமைச்சர் 1 டத்தோ நோர் அஸ்மி கசாலி கூறினார்.


Pengarang :