PBTSELANGOR

செலாயாங்கில் சிலாங்கூர் அரசின் இலவச பஸ் சேவை விரிவாக்கம்

ஷா ஆலம், பிப் 20– ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவச பஸ் சேவையை செலாயாங் நகராண்மைக்கழகம் விரிவாக்கம் செய்துள்ளது. இதன் வழி புதிதாக ஒரு தடம் அறிமுகம் செய்யப்படுவதாக நகராண்மைக்கழகத்தின் வர்த்தக துறையின் இயக்குநர் முகமது ஜின் மசூட் கூறினார்.

எம்.பி.எஸ்.4 எனப்படும் வங்சா பெர்மாய் மற்றும் செலாயாங் விளையாட்டரங்கு பஸ் நிலையத்தை இணைக்கும் அந்த புதிய தடத்தில் பண்டார் பாரு செலாயாங், செலாயாங் மருத்துவமனை, செலாயங் மால், மலேசிய வன ஆராய்ச்சிக் கழகம், தாமான் ஏசான், அமான் புரி, வங்சா பெர்மாய் வழியாக ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் பயணிக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த புதிய தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பஸ் சேவை செலாயாங் வட்டார மக்களுக்கு ஆக்ககரமான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்கப்பட்ட இச்சேவை அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

செலாயாங் நகராண்மைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த வசதியை வட்டார மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக பயணிகள் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள சீரான நிர்வாக  நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

 

 


Pengarang :