ECONOMYMEDIA STATEMENTSELANGOR

‘நாடி‘ கடனுதவித் திட்டத்திற்கு 419 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், பிப் 26– இம்மாதம் 22ஆம் தேதி வரை ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் (நாடி) கடனுதவித் திட்டத்திற்கு 419 விண்ணப்பங்களை ஹிஜ்ரா சிலாங்கூர் பெற்றுள்ளது.

சுமார்  90,000 வெள்ளி மதிப்பிலான 18 விண்ணப்பங்களுக்கு இதுவரை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் பொருளாதார திட்டமிடல் பிரிவு, கித்தா சிலாங்கூர் தொகுப்பின் 20 திட்டங்களுக்கான மேம்பாட்டு அறிக்கையில் கூறியுள்ளது.

எஞ்சியுள்ள விண்ணப்பங்கள் ஹிஜ்ரா சிலாங்கூர் கிளை அலுவலகங்களால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

மொத்தம் 1,350 மீனவர்கள் வரும் மார்ச் மாத தொடக்கத்தில் பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டைப் பெறுவர் என்றும் இந்நோக்கத்திற்காக 405,000 வெள்ளி செலவிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மேம்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர விபரங்கள் வருமாறு-

– சுமார் 256,494 வெள்ளி செலவில் 758 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

– நோய்த் தாக்கம் குறைவாக உள்ள 6,909 கோவிட்-19 நோயாளிகளை செர்டாங்கில்  உள்ள சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டுச் செல்வதற்கான பயண ஏற்பாட்டை செய்தது.

– மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 80 வெள்ளி 29,851 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

-ஆறு லட்சத்து 31 ஆயிரத்து 800 வெள்ளி மதிப்பிலான உணவுக் கூடைகள் 6,318 டாக்சி ஓட்டுநர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 1,601 பள்ளி பஸ் ஓட்டுநர்கள் 160,100 வெள்ளி மதிப்பிலான உணவுக் கூடைகளைப் பெற்றனர்.

-பி.பி.ஆர். குடியிருப்புகளைச் சேர்நத் 2,363 பேர் இம்மாதம் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை உணவு உதவிப் பொருள்களைப் பெற்றனர்.


Pengarang :