MEDIA STATEMENTNATIONALSELANGOR

மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்வர்- டாக்டர் சித்தி மரியா எதிர்பார்ப்பு

ஷா ஆலம், பிப் 26– சிலாங்கூரில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள கோவிட்-19 தடுப்பூசி இயக்கம், தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்குரிய நம்பிக்கையை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பரவியுள்ள கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் 33 விழுக்காடு சிலாங்கூரில் பதிவாகியுள்ளதால் அந்நோய்க்கு எதிராக தடுப்பூசியைப் பெறுவது மிக முக்கியமானதாகும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த தடுப்பூசி இயக்கத்தை நாங்கள் பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கிறோம். மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மாநில சுகாதார இலாகாவுடன் இணைந்து பாடுபடுவோம் என்றார் அவர்.

பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொள்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று இங்குள்ள ஷா ஆலம் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுவிட்ட போதிலும் பொதுமக்கள் தொடர்ந்து எஸ்.ஓ.பி. நடைமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என்பதோடு புதிய இயல்பில் செயல்படுவதற்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :