ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாநிலங்களுக்கு வெ.20 லட்சம் வெள்ள நிவாரண நிதி- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம், பிப் 19– வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிழக்கு கரை மாநிலங்களுக்கு கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் அரசு வழங்கியது.

இது சிலாங்கூரில் நடைபெறும் மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கு சான்றாக விளங்குவதாக பலர் போற்றத் தொடங்கியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் மாநில மக்களுக்கு மட்டும்  உதவிகள் வழங்குவதோடு அல்லாமல் பிற மாநிலங்களுக்கும்   உதவி வருவது  இம்மாநில ஆட்சியின் மகத்துவத்தை  நிரூபிப்பதாக  அமைந்துள்ளதாக  கூறுகின்றனர்.

பகாங் மாநிலத்திற்கு பத்து லட்சம் வெள்ளியும் திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஐந்து லட்சம் வெள்ளியும்  வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு கூறியது.

சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்த நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 26ஆம் தேதி இயங்கலை வாயிலாக நடைபெற்றதாகவும் அது தெரிவித்தது.

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகாங், கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சிரமத்தில் தாங்களும் பங்கு கொள்வதோடு அவர்கள் மீது அனுதாபமும் கொள்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.

கடந்த மாதம் தொடக்கத்தில் இம்மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வசிப்பிடங்களையும் உடமைகளையும் இழந்தனர். 24 மணி நேரம் நீடித்த அடைமழை காரணமாக ஆறுகள் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது.

அந்த மூன்று மாநிலங்கள் தவிர்த்து, பேரா, சிலாங்கூர் மற்றும் ஜோகூரின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடும் நிலை ஏற்பட்டது.

 


Pengarang :