ECONOMYSELANGORYB ACTIVITIES

விவசாயிகளுக்கு இயற்கை உர விநியோகம் அதிகரிப்பு- சிலாங்கூர் நடவடிக்கை

ஷா ஆலம், பிப் 25– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள விவசாயிகளுக்கான இலவச இயற்கை உர விநியோகத்தை மாநில அரசு அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 200 டன்னாக இருந்த அந்த உர விநியோகம் இவ்வாண்டு 500 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நவீனமயம் விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த அந்த உரத்தின் வாயிலாக மகசூல் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்கை உர விநியோகமும் அதிகரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் உற்பத்தி செய்யும் இயற்கை உரத்தை தஞ்சோங் காராங்கிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கியிருந்தோம். இதன் மூலம் விளைச்சலும் அமோகமாக இருந்தது என்றார் அவர்.

அதே சமயம், கோழியின் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உரம் டுரியான், அன்னாசி, மிளகாய் உள்பட அனைத்துப் பயிர்களுக்கும் ஊக்கமூட்டும் வளர்ச்சியை தருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பெக்கான் பெரேனாங் லாமா சந்தையில் 6,400 கிலோ இயற்கை உரத்தை விவசாயிகளிடம் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோல லங்காட் வட்டாரத்தில் சிறிய மற்றும் பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும்  நாற்பது விவசாயிகளுக்கு இந்த உரம் பகிர்ந்தளிக்கப்படுவதாக  அவர் மேலும் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக விவசாயிகளின் வீடுகள் அல்லது தோட்டங்களுக்கு நேரில் சென்று இந்த உரம் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :