ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

ஷா ஆலமில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசேதனையில் 729 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், பிப் 17– சிலாங்கூர் மாநில  அரசின் ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 19. எம்.பி.எஸ்.ஏ.  மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 729 பேர் பங்கு பெற்று பயனடைந்தனர்.

இந்த பரிசோதனையில் பெரியவர்கள், சிறார்கள் உள்பட பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டதாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு பணிக்குழுவின்  சமூக விவகாரங்களுக்கான அதிகாரி டாக்டர் நுருள் சோலிஹின் ஹஸ்னான் கூறினார்.

இருபத்து நான்கு மணி நேரத்தில் சோதனை முடிவுகளைக் கண்டறியக்கூடிய விரைவு ஆண்டிஜென் ஆர்.டி.கே-ஏஜி கருவி இந்த சோதனை இயக்கத்தில் பயன்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த  பரிசோதனை இயக்கத்திற்கு பொதுமக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலை மணி 9.00 முதல் மணி 4.00 வரை நடைபெற்ற இந்த சோதனையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டதை காண முடிந்தது என்றார் அவர்.

செர்கேர் கிளினிக்கை சேர்ந்த 20 மருத்துவ பணியாளர்களும் மலேசிய இஸ்லாமிய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த 11 பணியாளர்களும் இந்த பரிசோதனை இயக்கத்தை நடத்தியதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த சோதனை இயக்கம் நாளை 18ஆம் தேதி பண்டமாரான் பல்நோக்கு மண்டபத்தில் காலை  காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.


Pengarang :