NATIONALPBTPENDIDIKANSELANGOR

ஷா ஆலம், கோலக்கிள்ளானில் நாளை இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், பிப் 26– இலக்கிடப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை ஷா ஆலம் செக்சன் 28 மற்றும் கோலக்கிள்ளான் தாமான் பெண்டாமார் இண்டா ஆகிய இடங்களில் நடைபெறும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த  பரிசோதனை இயக்கம்  செக்சன் 28இல் உள்ள ஷா ஆலம் மாநகர்  மன்ற மண்டபத்திலும் பெண்டாமார் இண்டா 2, கிள்ளான் நகராண்மைக்கழக மண்டபத்திலும் காலை மணி 9.00 முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று அவர் சொன்னார்.

இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக  முன்கூட்டியே http://screening.selangkah.my எனும் அகப்பக்கம் வாயிலாகவும்  செலங்கா செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஐம்பாயிரம் பேரை இலக்காகக் கொண்டு மேலும் அதிகமான இடங்களில் இந்த பரிசோதனை இயக்கம் நடத்தப்படவுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் வசிக்கும் இடங்களை மையமாக கொண்டு இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் இலவச பரிசோதனைகளை மேற்கொள்ள 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மந்திரி புசார் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி கூறியிருந்தார்.

இத்தகைய இலவச பரிசோதனை இயக்கங்கள் ஷா ஆலம், பண்டமாரான், பெட்டாலிங் ஜெயா மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய பகுதிகளில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டன


Pengarang :