ECONOMYPBTSELANGOR

2,365  பி.பி.ஆர். குடியிருப்பாளர்களுக்கு 350 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா அறிவிப்பு

ஷா ஆலம், பிப் 19– நான்கு பி.பி.ஆர். மக்கள் குடியிருப்பு வீடமைப்புத் திட்ட வீடுகளில் குடியிருக்கும் 2,365 பேருக்கு தலா 350 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அந்த உதவித் தொகை இம்மாதம் தொடங்கி ஜூலை வரை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு தலா 50 வெள்ளியும் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு தலா 100 வெள்ளியும் அவர்களுக்கு வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த உதவித் திட்டத்திற்காக எட்டு லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி.பி.ஆர். குடியிருப்பில் வசிப்போரின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கவும் அவர்களின் அன்றாட குடும்பத் தேவைகளை ஈடுசெய்யவும் இந்த நிதியுதவி துணை புரியும் என அவர் மேலும் கூறினார்.

இதுதவிர, அக்குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சமசத்து உணவு கிடைப்பதை உறுதி செய்வது உள்பட பல்வேறு நலத் திட்டங்களை மாநில அரசு வரைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மந்திரி புசாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நேற்று நடைபெற்ற உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோத்தா டாமன்சாரா, கம்போங் பாரு ஐக்கோம், செராண்டா, பண்டார் பாரு பாங்கி ஆகிய நான்கு இடங்களில் மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நான்கு பி.பி.ஆர். குடியிருப்புகள் உள்ளன.


Pengarang :