ECONOMYMEDIA STATEMENTSELANGOR

உயர்கல்வி மாணவர் வெகுமதி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 2– சிலாங்கூர் மாநில உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான 1,000 வெள்ளி வெகுமதி திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

உயர்கல்விக் கூடங்களில் நுழையும் மாணவர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நிதியதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார். இம்மாதம் 31ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பதை சமர்ப்பிக்கும்படியும் அவர் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சிலாங்கூர்வாசிகளின் பிள்ளைகள் இந்த  வெகுமதி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக் கூடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் நான்காம் கட்ட திறன் சான்றிதழ் பயிற்சியை முழுநேரமாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்தவர்கள் தவிர்த்து, இம்மாநிலத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசிப்பவர்களும்  இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மலேசியர்களாகவும் எஸ்.பி.எம். தேர்வுச் சான்றிதழ் கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனையாகும்.

தகுதி உள்ள மாணவர்கள் மார்ச் 1 தேதி முதல் 31ஆம் தேதிக்குள்  hpipt.selangor.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக இதற்கான விண்ணப்பத்தை செய்ய வேண்டும்.

தங்களிடமுள்ள கூடுதல் ஆவணங்களை Uurs Setia HPIPT Bahagian Sumber Manusia, Tingkat 3 Bangunan Sultan salahuddin Abdul Aziz Shah, 40503 Shah Alam, Selangor எனும் முகவரிக்கு அனுப்பும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்த வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் இந்த உதவி நிதித் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டில் சிலாங்கூர் அரசினால் தொடக்கப்பட்டது.

 

 


Pengarang :