ECONOMYSELANGOR

கோவிட்-19 தடுப்புத் திட்டத்தில் மேலும் ஒரு தொழிற்சாலை பங்கேற்பு

ஷா ஆலம், மார்ச் 9– கோவிட்-19 நோய்த் தொற்றைத் துடைத்தொழிப்பதற்கு உருவாக்கப்பட்ட ‘பொய்ஸ்‘ எனப்படும் நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட பகுதிகளை அடையாளம் காணும் திட்டத்தில்  நாட்டின் பிரசித்தி பெற்ற கையுறைத் தயாரிப்புத் தொழிற்சாலை பதிந்து கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பொய்ஸ் திட்டத்தின் வாயிலாக உற்பத்திப் பணிகளை நிறுத்தாமல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய  வாய்ப்பினை அந்த தொழிற்சாலை பெற்றுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக அந்த தொழிற்சாலையில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தற்போது பொய்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசின் இந்த பொய்ஸ் திட்டத்தில் பங்கேற்கும்படி தொழிற்சாலை நிர்வாகத்தினரை அவர் கேட்டுக் கொண்டார்.

வேலையிடங்களில் நோய்த்  தொற்று மையங்கள் உருவாக்கம் காண்பதை தடுக்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கடந்த ஜனவரி 6ஆம் தேதி இந்த பொய்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த பொய்ஸ் திட்டத்தில் ஷா ஆலம், செக்சன் 15இல் உள்ள நெஸ்லே நிறுவனமும் கெடா மற்றும் ஜொகூரில் செயல்படும் செலஸ்திகா நிறுவனமும் பங்கேற்றுள்ளன.


Pengarang :