ALAM SEKITAR & CUACAPBTSELANGORWANITA & KEBAJIKAN

சிப்பாங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு தலா 500 வெள்ளி நிதியுதவி

சிப்பாங், மார்ச் 8–  இங்குள்ள பண்டார் பாரு சாலாக் திங்கியில் நேற்று ஏற்பட்ட கடும் புயலால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு தொடக்க உதவித் தொகையாக தலா 500 வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியது.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையை குறைப்பதற்கும் அவர்களின் நலனைக் காப்பதற்கும் இந்த உடனடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நிதியாக 500 வெள்ளியை வழங்கியுள்ளோம். இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் அவர்களுக்கு இந்த நிதி ஓரளவு  உதவியாக இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான அளவில் உதவிகள் வழங்குவது தொடர்பில் நாளை அல்லது புதன் கிழமை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

புயலால் பாதிக்கப்பட்ட சிப்பாங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொண்ட வருகையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு பொருத்தமான உதவிகளை வழங்குவது தொடர்பில் தாங்கள் விவாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட கடும் புயலுடன் கூடிய மழையில் சாலாக் திங்கி வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன.


Pengarang :