ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

சிலாங்கூரிலுள்ள 7,919 பேருந்து, டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 5- சிலாங்கூரிலுள்ள 7,919 பேருந்து மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்திடமிருந்து உணவு உதவிப் பொருள்களைப் பெறுவர்.

மாநில அரசின் கீழுள்ள மக்கள் வீடமைப்புத் திட்ட (பி.பி.ஆர்.) குடியிருப்புகளில் வசிக்கும் 2,635 பேரும் லெம்பா சுபாங் 1, பி.பி.ஆர். குடியிருப்பில் வசிக்கும் 3,004 பேரும் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவர் என்று அவ்வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஜூஹாரி அகமது கூறினார்.

வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் மேற்பார்வையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வரும் ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்படும் இந்த பரிவுத் திட்டத்திற்காக மாநில அரசு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பேருந்து மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு 50 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை வழங்கப்படும். இதுதவிர சிலருக்கு 50 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும். அந்த பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்  என்றும் அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் இந்த உணவு உதவிப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.


Pengarang :