ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக அதிகப்பட்ச முதலீட்டுப் பதிவு

ஷா ஆலம், மார்ச் 3– சிலாங்கூர் மாநிலம் கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிகப்பட்ச முதலீடுகளைப் பதிவு செய்துள்ளது. இந்த முதலீடுகளின் மதிப்பு 3,870 கோடி வெள்ளியாகும். கடந்த 27 ஆண்டுகளில் பதிவான அதிகப்பட்ச எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவிய போதிலும் உற்பத்தித் துறை அதிகப்பட்சமாக 1,840 கோடி வெள்ளி வருமானத்தைப் பதிவு செய்ததாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிக முதலீடுகளை  உற்பத்தித் துறை பதிவு செய்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இதுவே மிக அதிக எண்ணிக்கையிலான முதலீடாகும் என்றார் அவர்.

சிலாங்கூருக்கு அடுத்து 2,100 கோடி வெள்ளி முதலீட்டுடன் சபா இரண்டாவது இடத்திலும்  1,960 கோடி வெள்ளி முதலீட்டுடன் சரவா மூன்றாவது இடத்திலும் உள்ளதை மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அறிக்கை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் 1,710 கோடி வெள்ளி முதலீட்டையும் பினாங்கு 1,600 கோடி வெள்ளி முதலீட்டையும் ஈர்த்துள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டில் 4,780 கோடி வெள்ளி முதலீட்டை பதிவு செய்த சிலாங்கூர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.7 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியது.

 


Pengarang :