NATIONALSELANGOR

சிலாங்கூர் உள்பட 4 மாநிலங்களில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல்

ஷா ஆலம், மார்ச் 3– சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளது.

அதே சமயம், கிளந்தான், கெடா, நெகிரி செம்பிலான், சரவா, பேராக் ஆகிய மாநிலங்களில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து அமல் செய்யப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

மேலும், தற்போது நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்டுள்ள மலாக்கா, பகாங், திரங்கானு, சபா, புத்ரா ஜெயா, லபுவான் ஆகிய மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காணும் என்று அவர் சொன்னார்.

சரவா தவிர்த்து இதர மாநிலங்களில் இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை அமலில் இருக்கும். சரவா மாநிலத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 15 வரை இந்நடைமுறை அமல்  செய்யப்படும் என்றார் அவர்.

சபா தவிர்த்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் 5ஆம் தேதி முதல் மாவட்டங்களை கடப்பதற்கான தடை நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :