SAINS & INOVASISELANGORYB ACTIVITIES

சி.எம்.சி.ஒ. அமலாக்க காலத்திலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம்,  மார்ச் 5– இன்று அமலாக்கம் காணும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தவறாது பின்பற்றும்படி பொதுமக்களை சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் வலியுறுத்தியுள்ளார்.

நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் அறிவிக்கப்பட்ட விதிமுறை தளர்வுகளை அனைவரும் விவேகத்துடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

பள்ளிகளிலும் வேலையிடங்களிலும் இந்த விதிமுறை தளர்வுகளை முறையாக கையாள வேண்டும் என்பதோடு ஆசிரியர்களும் முதலாளிகளும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வேலையிடங்களில்  எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படாவிட்டால் அது குறித்து புகார் செய்யும் உரிமை  தொழிலாளர்களுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், பினாங்கு, கோலாலம்பூர் மற்றும் ஜொகூரில் தற்போது அமல் செய்யப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 5ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையாக மாற்றப்படவுள்ளதாக  பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த 2ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :