ECONOMYSELANGORYB ACTIVITIES

நீர்க் கட்டணத்தைக் குறைக்க தனி மீட்டரை பொருத்துவீர்- அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4– நீர்க்கட்டணத்தை குறைப்பதற்கு ஏதுவாக கூட்டு மீட்டருக்குப் பதிலாக தனி  மீட்டரைப் பொறுத்திக் கொள்ளும்படி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நீர்கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்படும் காரணத்தால் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதற்கான சாத்தியங்களை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்டு நீர்க்கட்டண மீட்டரை குடியிருப்பு கூட்டு நிர்வாக அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதனால் நீர்க் கட்டணம் அதிகமாக உள்ளதோடு தாமதமாக செலுத்தப்படும் காரணத்தால் விநியோகமும் துண்டிக்கப்படும் அபாயமும் உள்ளது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள டாமன்சாரா பிஸ்தாரியில் உள்ள குடியிருப்புகளுக்கு தனி மீட்டர்களைப் பொறுத்தும் பணியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த குடியிருப்பில் உள்ள 421 குடியிருப்பாளர்கள் நீர் விநியோகத்தை கூட்டு மீட்டரிலிருந்து தனி மீட்டருக்கு மாற்றி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தனது தொகுதியிலுள்ள டாமன்சாரா பிஸ்தாரி, பங்சாபுரி பி.கே.என்.எஸ். செக்சன் 17, மற்றும் காசிங் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய மூன்று  குடியிருப்புகளும் இத்திட்டத்திற்கு மாறிவிட்டதாக அவர் சொன்னார்.

கூட்டு மீட்டர் திட்டத்தின் கீழ் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கமான நீர் பயனீட்டை கூட்டு மீட்டர் பதிவு செய்யும். பிறகு ஒவ்வொரு குடியிருப்பாளரும் பயன்படுத்திய நீரின் அளவை மதிப்பீடு செய்யும் பணியை கூட்டு நிர்வாக மன்றம் மேற்கொள்ளும்.


Pengarang :