MEDIA STATEMENTPBTSELANGOR

நோய்த் தொற்று குறைந்த போதும் இலவச கோவிட்-19 பரிசோதனை தொடரும்

ஷா ஆலம், மார்ச் 9– சிலாங்கூரில் நோய்த் தொற்று கண்டவர்களின் தினசரி எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் இலவச கோவிட்-19 பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகும் பகுதிகளை இலக்காக கொண்டு அந்த பரிசோதனை இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

மாநில அரசின் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தை அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும்படி மாநில மக்களை கேட்டுக் கொண்ட அவர், இந்நோக்கத்திற்காக மாநில அரசு பெரும் தொகையை செலவிட்டு வருகிறது என்றார்.

கோவிட்-19 பரிசோதனை இயக்கம் இலவசமாக மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் தயக்கமின்றி இச்சோதனையில் பங்கேற்று நோய்த் தொற்றிலிருந்து தாங்கள் விடுபட்டுள்ளதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அந்த நோய்த் தொற்றின் தாக்கம் சமூகத்தில் இன்னும் இருந்து வருவதால்   நாம் இவ்விவகாரத்தில் அலட்சியப் போக்கை கடைபிடிக்க கூடாது என்றும் அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு கித்தா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இலவச கோவிட்-19 பரிசோதனைக்காக 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 50,000 பேருக்கு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள அது இலக்கு வகுத்துள்ளது.


Pengarang :