பந்திங் வட்டாரத்தில் புகை மூட்டம் ஏற்பட்டதற்கு காட்டுத் தீயே காரணம்

கோல லங்காட், மார்ச் 4- பந்திங் வட்டாரத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதற்கு கோல லங்காட் செலத்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீயே காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த வனப்பகுதியிலிருந்து வெளியான அடர்த்தியான புகை காரணமாக பந்திங் வட்டாரத்தில் நேற்று காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு 165ஆக பதிவானதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

அப்பகுதியில் விவசாய நோக்கத்திற்காக புதிய நிலங்களைத் திறக்க முயலும் விவசாயிகளால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்  சொன்னார்.

ஜோஹான் செத்தியா பகுதியிலும் இதே நிலை நீடிக்கிறது. அங்கு நேற்று காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு 183ஆகப் பதிவானது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீயணைப்பு நடவடிக்கைகள் இப்பிரச்னைக்கு தீர்வைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

தீ ஏற்பட்டப் பகுதிகளை நேற்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பந்திங், ஜோஹான் செத்தியா தவிர்த்து பெட்டாலிங் ஜெயாவிலும் நேற்று காற்றின் தரக் குறியீடு 141ஐ எட்டியது.

சுமார் 40 ஹெக்டர் நிலப்பரப்பை உட்படுத்திய கோல லங்காட் செலத்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ சூழ்ந்துள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  இயக்குநர் டத்தோ நோர்ஹசாம் காமிஸ் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :