ANTARABANGSAECONOMYNATIONAL

மலேசியா 6 லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை ஜூன் மாதம் பெறும்

புத்ரா ஜெயா, மார்ச் 31– மலேசியா முதல் கட்டமாக ஆறு லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை வரும் ஜூன் மாதம் பெறும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அந்த தடுப்பூசிகள் தாய்லாந்தில் உள்ள அஸ்ட்ராஸேனேகா ஒப்பந்த உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என்று அவர சொன்னார்.

கோவாக்ஸ் தடுப்பூசிக்கு மாற்றாக அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை அஸ்ட்ராஸேனேகாவிடமிருந்து நேரடியாக தருவிப்பது தொடர்பான உறுதியான தகவலை இன்று தாம் பெற்றதாக அவர் கூறினார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கான வர்த்தக ஸ்தபானங்களின் கூட்டு பங்களிப்பு தொடர்பான நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விதித்துள்ள தடையினால் மலேசியாவுக்கு அஸ்ட்ராஸேனேகாவின் கோவாக்ஸ் தடுப்பூசிகளை தருவிக்கும் நடவடிக்கை பாதிப்புறுமா என்ற கேள்விக்கு, மலேசியாவுக்கான அஸ்ட்ராஸேனேகா கோவாக்ஸ் தடுப்பூசிகள் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து அல்லாமல் தென் கொரியாவின் எஸ்.கே. பயோசைன்ஸ் நிறுவனத்திடமிருந்து தருவிக்கப்படுவதால் இந்தியாவின் தடை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் பதிலளித்தார்.

இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டுத் தேவைக்கு பயன்படுத்தும் நோக்கில் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.


Pengarang :